தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பொழிந்தது. போதிய அளவில் மழை பொழியவில்லை.


கடந்த 9ஆம் தேதி வரை, 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், பருவமழை தாமதம் காரணமாக 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.  


காவிரி பிரச்னை:


இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக் கோரிய‌ தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். 


இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார்.


இந்த நிலையில், கடும் வறட்சியை சந்தித்து வருவதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் கடும் வறட்சியை சந்தித்து வருவதாக அவர் கூறியுள்ளார். 15 நாள்களுக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், டி.கே.சிவகுமார் இவ்வாறு பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


"மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்"


தண்ணீர் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் ஷெகாவத்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஒவ்வொரு மாதமும் கர்நாடகா காவிரியில் எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்றும், பிலிகுண்டுலுவில் அது அளவீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. அதன்படி, 2023 ஜூன் 1-ம் தேதி முதல் ஆக.11 வரை கர்நாடகா 53.77 டிஎம்சி தமிழகத்துக்கு வழங்கி இருக்க வேண்டும்.


ஆனால், வெறும் 15.80 டிஎம்சி மட்டுமே வழங்கியுள்ளது. ஆக, நமக்கு பற்றாக்குறை 37.97 டிஎம்சி. நமது வற்புறுத்தலுக்கு இணங்கி கடந்த 10-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்குமுறை கமிட்டி கூட்டத்தில் விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரை 15 நாட்களுக்கு விடுவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 11-ம் தேதி (நேற்று) நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது குறித்து 3 மணி நேரத்துக்கு மேல் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் தேவை கடுமையாக வலியுறுத்தப்பட்டது.


ஆனால், கர்நாடகா சார்பில் வழக்கம்போல தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விநாடிக்கு 8,000 கனஅடி மட்டுமே, அதுவும் ஆக.22 வரைதான் தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


கர்நாடகாவில் இருக்கும் 4 அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.57 டிஎம்சியில் 93.54 டிஎம்சி தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அதாவது கர்நாடகாவின் மொத்த இருப்பில் 82 சதவீதம் தண்ணீர் கர்நாடக வசம் இருப்பில் இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் போவதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழி இல்லை. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உரிய நீர் பெறப்படும்" என்றார்.