விடாது துரத்தும் மதுபான கொள்கை வழக்கு.. சஞ்சய் சிங் மனுவில் EDக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தனது கைதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Continues below advertisement

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முதலில், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியாதான். 

Continues below advertisement

சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். 

ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர் நெருக்கடி:

பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தனது கைதை எதிர்த்தும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சஞ்சய் சிங்கின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது.

EDக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்:

இதுகுறித்து பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேண்டுமானால் பிணை மனு தாக்கல் செய்யலாம் என்றும் ஆனால், பிணை மனு மீதான விசாரணை தனியாக நடத்தப்படும் என்றும் எந்த விதத்திலும் இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அதன் தீர்ப்பு வழங்கப்படாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை டிசம்பர் 2ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.

பண மோசடி வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர், டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.                                                                             

Continues below advertisement