சிறை கைதிகளுக்கு வாக்குரிமை அளிப்பதை மறுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 62(5)க்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் எஸ். ரவிந்திர பட், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா என்பவர் பொது நல வழக்கை தொடர்ந்திருந்தார். அதில், பிரிவு 62(5) இல் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் 'சிறையை' அளவுகோலாகப் பயன்படுத்துகிறது. இதனால் பல முரண்பாடுகளை உருவாக்குகிறது என அவர் சுட்டி காட்டியிருந்தார்.


2019இல், ஆதித்ய பிரசன்னா தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62(5)ஐ நீக்க கோரிக்கை விடுத்திருந்தார்.


 






இது அனைத்து விதமான தேர்தல்களிலும் வாக்களிக்கும் உரிமையை சிறையில் அடைத்து வைத்திருபவர்களிடம் இருந்து பறிக்கிறது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறுவிதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலோ அல்லது காவல்துறையின் சட்டப்பூர்வ காவலில் இருந்தாலோ எந்தவொரு நபரும் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கக்கூடாது என சட்டம் பிரிவு 62(5) கூறுகிறது.


விசாரணையின் கீழ், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் அல்லது ஜாமீனில் வெளிவரும் நபர், வாக்குரிமையைப் பயன்படுத்த முடியுமா என்பதை அந்த பிரிவு குறிப்பிடவில்லை என்றும் மனுதாரர் வாதம் மேற்கொண்டார்.


செய்த குற்றத்தின் தன்மை அல்லது விதிக்கப்பட்ட தண்டனையின் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த விதமான நியாயமான வகைப்பாடும் இல்லாததால், இந்த சட்டப் பிரிவு ஒரு முழுவதுமான தடையாக இருக்கிறது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. 


 






இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் எஸ். ரவிந்திர பட், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 29ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.