குஜராத்தில் நேற்று கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது நாட்டில் சமீப காலத்தில் நிகழ்ந்த மோசமான விபத்துகளில் ஒன்றாகும். தற்போது, இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவிலும் உலகிலும் நடந்த மோசமான விபத்துகள் குறித்து பார்க்கலாம்.


2022: 141 பேரின் உயிரை பறித்த குஜராத் விபத்து


குஜராத் மாநிலம் மோர்பியில் நேற்று நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நிகழும்போது, அந்த பாலத்தில் கிட்டத்தட்ட 500 இருந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


2021: மெக்சிகோ விபத்து


மெக்ஸிகோ நகர மெட்ரோ அமைப்பின் உயரமான பகுதி இடிந்து விழுந்ததில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது. இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


2018: இத்தாலி விபத்து


இத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்து விழுந்ததில் 43 பேர் பலியாகினர். பிரான்ஸ் மற்றும் இத்தாலியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான மொராண்டி பாலம் திகழ்கிறது. ஆகஸ்ட் மாதம் பெய்த மழையில், பாலம் இடிந்து விழுந்ததில் 12க்கும் மேற்பட்ட வாகனங்களும் பயணிகளும் பள்ளத்தில் சிக்கினர்.


2016: கொல்கத்தா விபத்து


மார்ச் மாதம், கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். கான்கிரீட் அடுக்குகள் மற்றும் இடிபாடுகள் அடியில் காயமடைந்த 100 பேரை மீட்புப் படையினர் மீட்டனர்.


2011: டார்ஜிலிங் விபத்து


அக்டோபரில், டார்ஜிலிங்கில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகிழக்கு இந்தியாவில் திருவிழாவிற்காக மக்கள் கூட்டம் நிறைந்திருந்த பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்திற்குள் அருணாச்சல பிரதேசத்தில் ஆற்றின் மீது தரைப்பாலம் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியாகினர்.


2007: நேபாளம் மற்றும் சீனா


சீனாவில் ஆகஸ்ட் மாதம் மத்திய ஹுனான் மாகாணத்தில் ஆற்றுப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய போது, அது இடிந்து விழுந்ததில் குறைந்தது 64 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 


நேபாளத்தில் டிசம்பர் மாதம் நாட்டின் மேற்கில் யாத்ரீகர்கள் நிறைந்த பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காணாமல் போயினர். விபத்து நடந்த போது தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சுமார் 400 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 100 பேர் நீந்தி சென்று உயிர் பிழைத்தனர்.


2006: இந்தியா மற்றும் பாகிஸ்தான்


ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் வடமேற்கில் பெஷாவரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்தான் என்ற இடத்தில் பருவ மழையால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதில், குறைந்தது 40 பேர் இறந்தனர். இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் பீகாரில் உள்ள ரயில் நிலையத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் பயணிகள் ரயில் மீது இடிந்து விழுந்ததில் குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர்.