கேரளாவில் பிரேக் அப் செய்ய மறுத்ததால், தனது 23 வயது காதலரை விஷம் கொடுத்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், காவல்நிலையத்தில் இன்று கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட 22 வயது பெண், போலிஸ் நிலையத்தின் கழிவறையில் இருந்த போது கிருமிநாசினியை உட்கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி ஷில்பா, "தற்கொலைக்கு முயற்சி செய்ததை உடனடியாக உணர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கண்காணிக்கப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் விரைவில் பெறப்படும்.
வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், தனது 23 வயது காதலனுக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் நேற்று இரவு காவலில் எடுக்கப்பட்டார்" என்றார்.
இது தொடர்பாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி அஜித் குமார், "அக்டோபர் 14ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்த பிறகு, பூச்சிக்கொல்லி கலந்த ஆயுர்வேத கஷாயத்தை அவருக்கு கொடுத்துள்ளார். அந்த நபர் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.
அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு பிப்ரவரியில் முறிந்தது. ஆனால், அந்த நபர் உறவில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர், பல வழிகளில் அவரைத் தவிர்க்க முயன்றார். ஆனால், எதுவும் பலனளிக்காததால், அவரை ஒழிக்க முடிவு செய்தார். அவருடைய கூற்றுகளிலிருந்து நாம் புரிந்துகொள்வது இதுதான்.
இறப்பதற்கு முன், விஷம் கொடுத்ததில் பெண்ணின் பங்கு பற்றி அந்த நபர் எதுவும் குறிப்பிடவில்லை. அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் இதில் சந்தேகித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அக்டோபர் 20ஆம் தேதி அவரது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார்.
அவரைக் கொல்வதற்காக அந்த பெண் அவருக்கு ஒருவித சாறு அல்லது கஷாயம் கொடுத்ததாக காதலரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரது வாக்குமூலம் குறித்த செய்தி வெளியான நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக இளைஞனின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்தார்" என்றார்.