Government doctors reservation: அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கின் தொடர்பான விசாரணையின்போது, தமிழ்நாட்டில் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.


அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


15 நாள்களில் மாணவர் தேர்க்கையை நடத்தவும் 16ஆவது நாள் எத்தனை இடங்கள் நிரப்பாமல் உள்ளதோ அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை ஒதுக்குவது தொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடரலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்குமாறு தமிழ்நாடு அரசுக்கும் மனுதாரருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் சுரேஷ் குமார் கூறுகையில், "2022-2023 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில்  உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50% இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. 


கடந்த ஆண்டு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து ஏதேனும் விளக்கம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என்பது மாநில அரசு மற்றும் மனுதாரர்களின் விருப்பம்" என்றார்.


10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற மனுதாரர்களுக்கும் அரசுக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.


இருப்பினும், 25-11-2022 முதல் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்படுவதற்கான அட்டவணையின்படி மத்திய அதிகாரிகள் கவுன்சிலிங்கைத் தொடர விரும்பினால், அவர்கள் அதையே தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இதைத்தொடர்ந்து, மத்திய அரசு, அந்த அரசாணையை குறிப்பிடாமல், தமிழ்நாட்டில் 100% சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களுக்கான பொது கவுன்சிலிங்கிற்கான ஆணையை வெளியிட்டது.


ஆனால், இறுதியில், உச்ச நீதிமன்றம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதாவது முழு 100% இடங்களுக்கான கவுன்சிலிங் 2020-2021 கல்வியாண்டுக்கு நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


ஆனால், அடுத்த கல்வியாண்டில் அதாவது 2021-2022க்கு, 2-11-2020 தேதியிட்ட உத்தரவின் மூலம் 2020-2021 கல்வியாண்டிற்கு வழங்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பை தொடர தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இடஒதுக்கீட்டைக் கருத்தில் கொண்டு 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான கவுன்சிலிங்கைத் தொடர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இருக்கவில்லை.