சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள பிகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பல்வேறு பொய்யான வீடியோக்கள் பரப்பப்பட்டது. வேலைக்காக தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்த பிகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவிய பொய் செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


பிகார் தொழிலாளர்கள் விவகாரம்:


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால் பரப்பப்படும் பொய் செய்திகள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றது. இருப்பினும், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இது பெரிய பிரச்னையாக மாறவில்லை. 


இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டில் பிகார் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர், தனது யூடியூப் பக்கத்தில் பல்வேறு பொய்யான வீடியோக்களை பதிவேற்றினார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தமிழ்நாட்டிலும் பிகாரிலும் பல்வேறு காவல்நிலையங்களில் மணிஷ் காஷ்யபுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி மணிஷ் காஷ்யப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


"தமிழ்நாடு போன்ற நிலையான மாநிலத்தில் குழப்பத்தை உண்டாக்கக் கூடாது"


தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பார்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.


குற்றம்சாட்டப்பட்ட காஷ்யபின் சார்பாக மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். "சில முக்கிய செய்தித்தாள்களால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் அவர் வீடியோக்களை வெளியிட்டார். மேலும், அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றால், அந்த செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட வேண்டும்" என காஷ்யப் தரப்பு வாதம் முன்வைத்தது.


தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை சேர்த்து விசாரிக்கக் கோர சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான மாற்று வழி மனுதாரருக்கு உள்ளது. மனுதாரர் ஒரு பத்திரிகையாளர் அல்ல. பீகாரில் தேர்தலில் போட்டியிட்ட அரசியல்வாதி" என்றார்.


குழப்பத்தை ஏற்படுத்தலாமா?


இரு தரப்பு வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "தமிழ்நாடு ஒரு நிலையான அமைதியான மாநிலம். நீங்கள், எதையாவது பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தினால், இதற்கு எல்லாம் நாங்கள் காது கொடுத்து கேட்டு கொண்டிருக்க முடியாது. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் இந்த போலி வீடியோக்களை உருவாக்கியுள்ளீர்கள்" என்றார்.


முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்தது. அதேபோல, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.