கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே. சிவகுமாருக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டி.கே. சிவகுமாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் பின்னணி:
வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்திய வருமான வரித்துறை, கடந்த 2017 ஆம் ஆண்டு, சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்களுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்திய தண்டனை சட்டம், பிரிவு 120பி கீழ் சிவகுமாருக்கு எதிராக வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், இது பாஜகவினருக்கு சொந்தமான பணம் என சிவகுமார் பகீர் கிளப்பினார். கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கத்துறை பண மோசடி வழக்கை தொடர்ந்தது.
பின்னர், டி.கே. சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தனர். சிவகுமாரின் 50 நாள் சிறைவாசத்திற்கு பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுவதாகவும் நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் சிவகுமார் தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:
இந்த நிலையில், பண மோசடி வழக்கில் மேற்கொள்ளப்பட்ட குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சிவகுமாரும் அவரது உதவியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்தார்.
பட்டியலிடப்படாத குற்றங்களில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120பியை பயன்படுத்தி பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், டி.கே. சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.