ஜார்க்கண்ட் மாநிலம் தும்பாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடு மறைவதற்குள், அடுத்ததாக 21 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நாட்டையே உலுக்கியுள்ளது. 


சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான நடன மேடை கலைஞர் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அவரது சக நடிகர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


பாலமுவை சேர்ந்த மூன்று இணை நடிகர்கள், 21 வயதான நடன மேடை கலைஞருக்கு போதைப்பொருள் கொடுத்து காரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஷ்ராம்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ராகேஷ் சிங் தெரிவிக்கையில், “ இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது குற்றவாளியை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 






குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரே இசைக்குழுவில் இணைந்து பணியாற்றியதால் அறிமுகமானவர்கள் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பாலமுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். 


மேலும் அவர், “ சத்தீஸ்கரில் இருந்து பலாமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த நடன பெண் கலைஞர் வந்துள்ளார். சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் நடத்த முடியாமல் போயுள்ளது. இதையடுத்து, அந்த பெண் தனது சக ஆண் நடிகர்களுடன் ஹூசைனாபாத்தில் மற்றொரு விழாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஹூசைனாபாத் செல்லும் வழியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பெண்ணுக்கு சில போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர்” என்று தெரிவித்தார். 


ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள விஷ்ராம்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாலையில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தபின், மயக்க நிலையில் சாலையின் ஓரத்தில் விட்டுவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னர் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தும்கா மாவட்டத்தில் தனது கணவருடன் முகாமில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.