Crime: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு  ஜார்க்கண்ட் அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளது.


ஸ்பெயின் பெண் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்த ஐகோர்ட்:


ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதோடு, பெண்ணின், கணவரை கொடூரமாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றிருக்கிறது. 


இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள்,  திரை பிரபலங்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.  இந்த நிலையில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி நவநீத் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  டிஜிபி, தலைமைச் செயலாளர், எஸ்பி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது ஜார்க்கண்ட் நீதிமன்றம். 


ரூ.10 லட்சம் இழப்பீடு:


குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தும்கா எஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக ஜார்க்கண்ட் அரசு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. இந்த இழப்பீட்டை  துணை காவல் ஆணையர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு வழங்கினார்.  


நடந்தது என்ன?


ஆசிய நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒரு பைக் ரைடைத் திட்டமிட்டிருந்தனர்.  ஆசிய நாடுகளில் பைக்கில் சென்று தங்களுக்கு பிடித்தமான இடங்களில் சுற்றி பார்க்க வேண்டும் என்ற திட்டத்துடன்  இந்த தம்பதி முதலில் பாகிஸ்தான் சென்றனர்.


பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கு சென்ற இந்த தம்பதி அங்கிருந்து வங்கதேசம் சென்றனர். வங்க தேசத்தில் முக்கியமான இடங்களை சுற்றி பார்த்த தம்பதி, அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பீகார் வழியாக ஜார்கண்ட் வந்துள்ளனர். 


பைக்கிலேயே பல்வேறு இடங்களுக்கு செல்லும் இந்த தம்பதி  இரவு நேரத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.  அந்த வகையில், கடந்த 1ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் தும்கா மாவட்டத்தில் இந்த தம்பதி இரவில் சென்றடைந்துள்ளனர்.


அங்கு, தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு 11 மணியளவில் சுமார் 7 முதல் 10 பேர் கொண்டு கும்பல், தற்காலிக கூடாரம் இருக்கும்  இடத்தில் புகுந்து, சுற்றுலா தம்பதியை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.