நாட்டின் குடியரசுத் தலைவராக தன்னை நியமிக்கக் கோரிய ஒருவரின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. எதிர்காலத்தில், இந்த விவகாரம் தொடர்பான அவரது மனுவை விசாரிக்க வேண்டாம் என்றும் பதிவுத்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, அற்பதனமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
குடியரசு தலைவர் பதவிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. கிஷோர் ஜெகநாத் சாவந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இந்த உத்தரை பிறப்பித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனுக்களை எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.
மேலும், சாவந்த் கூறிய மோசமான கருத்துக்களை பதிவில் இருந்து நீக்குமாறு பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சாவந்த், சமீபத்தில் நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று கூறிக்கொண்ட அவர், உலகின் அனைத்து குழப்பமான சூழ்நிலைகளிலும் பாடுபட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "மனுதாரர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால் அவரது சிறப்பு நிபுணத்துவத்தின் அடிப்படையில் உரை நிகழ்த்த முடியும். ஆனால், இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்வது முறையல்ல" என தெரிவித்தது.
இந்தாண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், பாஜக சார்பில் களமிறங்கிய 64 வயதான திரெளபதி முர்மு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறங்கி தோல்வி அடைந்தார்.
இந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக அவர் பதவியேற்று கொண்டார். திரௌபதி முர்முவுக்கு அப்போதைய இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.