கடந்த 2000ஆம் ஆண்டு, டெல்லி செங்கோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.


செங்கோட்டையில் தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட மூவர் கொல்லப்பட்டனர். தன்னை குற்றவாளியாக கருதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் தண்டனையை எதிர்த்தும் அவர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


இந்த மறுஆய்வு மனுவை இந்திய தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி பேலா எம், திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி யு.யு. லலித், "மின்னணு பதிவுகளை ஆதாரமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.


இருப்பினும், முழு விவகாரத்தை கருத்தில் கொண்டாலும் அவரது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். மறுசீராய்வு மனுவை ரத்து செய்கிறோம்" என்றார்.


 






வழக்கின் பின்னணி


கடந்த 2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22ஆம் தேதி, நாட்டுக்குள் ஊடுருவி வந்த சிலர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். 7ஆவது ராஜ்புதானா ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்த சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூன்று பேரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிப், இந்த வழக்கில் டிசம்பர் 25, 2000 அன்று கைது செய்யப்பட்டார்.


அக்டோபர் 24, 2005 அன்று விசாரணை நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 31, 2005 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் செப்டம்பர் 13, 2007ஆம் ஆண்டு உறுதி செய்தது.


கடந்த 2011ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதி, தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவரது மறுசீராய்வு மனுவை ஆகஸ்ட் 28, 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இருப்பினும், மரண தண்டனை வழக்கில் தொடரப்படும் மறுசீராய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதையடுத்து, அவரின் மறுசீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொள்ள உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு முடிவு செய்தது. முன்னதாக, 2014ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி, அவரின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.