இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள தேச துரோக பிரிவை மீண்டும் மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இனிமேல் இந்தப் பிரிவின் கீழ் மத்திய மாநில அரசுகள் வழக்குகள் பதிவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் ஐபிசி பிரிவு 124 ஏ எப்படி வந்தது? இதுவரை உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?
ஐபிசி பிரிவு 124 ஏ வந்தது எப்படி?
இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 1860ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டது. அப்போது தாமஸ் மெக்காலே இதை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தச் சட்டத்தில் பிரிவு 124 ஏ தேச துரோகம் என்பதை ஆங்கிலேய அரசு சேர்த்திருந்தது. அதாவது ஆங்கிலேயே அரசிற்கு எதிராக ஒருவர் தவறாக பேசினாலோ அல்லது புரட்சியை துண்டும் வகையில் செயல்பட்டாலோ இதை பயன்படுத்த ஆங்கில அரசு முடிவு செய்தது. இதன் காரணமாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தப் பிரிவு தொடர்ந்து ஐபிசியில் இடம்பெற்று இருந்தது. இந்தப் பிரிவை சுதந்திரத்திற்கு பிறகும் பல முறை இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இந்தச் சட்டத்தை அறிமுகம் செய்த ஆங்கிலேய நாட்டில் இச்சட்டம் முற்றிலும் இல்லை. இங்கிலாந்தில் இந்த தேச துரோக சட்டப்பிரிவு இல்லை.
பிரிவு 124 ஏ தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?
- 1962ஆம் ஆண்டு கேதார்நாத் vs பீகார் வழக்கில் உச்சநீதிமன்றம், “வன்முறை தூண்டும் வகையில் ஒருவரின் பேச்சு இருந்தால் அப்போது தேச துரோக வழக்கு பதிவிடலாம்” எனத் தெரிவித்திருந்தது.
- 1982ஆம் ஆண்டு அலரி vs கேரளா வழக்கில் உச்சநீதிமன்றம்,”அரசுக்கு எதிரான கருத்துகள் ஒருபோதும் தேச துரோக வழக்காக கருதப்படாது” எனக் கூறியிருந்தது.
- 1995ஆம் ஆண்டு பல்வான் சிங் வழக்கில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவது தேச துரோக வழக்கில் வராது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
- இவை தவிர மக்களாட்சியில் அரசுக்கு எதிரான கருத்து என்பது முக்கியமான ஒன்று என்ற பார்வையும் உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகங்களில் 2018 தரவுகளின் படி 2016ஆம் ஆண்டு 35 தேச துரோக வழக்குகள் பதிவாகியிருந்தன. அந்த வழக்குகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 70 ஆக உயர்ந்திருந்தது. மேலும் அடிக்கடி அரசுகள் தங்களுக்கு எதிரான குரல்களை தேச துரோகம் என்ற வழக்கில் கொண்டு வந்து சிதைத்து விடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
தவறாக பேசி வன்முறையை துண்டுதல் போன்றவற்றிற்கு ஏற்கெனவே ஐபிசி பிரிவு 153 ஏ உள்ளது. அப்படி இருக்கும் போது 124ஏ என்பது தேவையற்ற ஒன்று சில சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆகவே மத்திய அரசு இந்தப் பிரிவை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்