தமிழக மற்றும் புதுச்சேரியில் வரும் 15 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அசானி புயல் காரணமாக ஒடிசா, ஆந்திரா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்தது. இம்மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பொழிவு பதிவானது. தற்போது, வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் 24 மணிநேரத்தில் காற்றழுத்தாழ்வு மண்டலாம வலுவிழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.






சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய வானிலை மையத்தின் தகவலின் படி, இன்று காலை நிலவரப்படி,  அசானி புயல் இன்று மாலைவரை வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் என்றும், மணிக்கு 6 கி.மீ வேகத்தில் பயணித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இன்றும் நாளையும், பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்தில் கடலோர பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை ஆந்திர வட கடலோர பகுதிகளிலும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளிலும் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி அசானி புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இன்று பிற்பகலுக்குள் விசாகப்பட்டினம் – காக்கிநாடு இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி புயல் வலுவிழந்த புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


புயல் கரையை கடக்கும்போது ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மேற்கு வங்காளத்தின் தென்பகுதியில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இந்த புயல் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேலும் வலுவிழக்க உள்ளது.