மக்கள் வரிப்பணம் மூலம் மக்களுக்காக வழங்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி பல முறை காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.


இலவசங்களை விமர்சிக்கும் அதே நேரத்தில் தேர்தல் என வரும்போது, பாஜக சார்பில் இலவசங்கள் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு, ஐந்து மாநில தேர்தலில் பாஜக சார்பில் பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டது.


ஆண்டுக்கு நான்கு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாகவும், புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளின் பெயரில் ஃபிக்சட் டெபாசிட் பதிவு செய்வதன் மூலம் 21 வயதை அடைந்த பிறகு அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்தது.


இலவசங்களா? மக்கள் நல திட்டங்களா?


இப்படிப்பட்ட சூழலில், அடுத்த மாதம் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. இதுதொடர்பான அறிவிப்பை கடந்த சனிக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் நெருங்குவதால் பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்து வருகிறது.


இந்த நிலையில், தேர்தல் காலத்தில் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்படி அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி அவர்களின் அங்கீகாரத்தை தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்பு கொண்டுள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜெ. பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை நாளை விசாரிக்க இருக்கிறது.


என்ன முடிவு எடுக்கப்போகிறது உச்ச நீதிமன்றம்?


இந்த பொது நல வழக்கை அஸ்வினி உபாத்யாய் என்பவர் தொடர்ந்துள்ளார். அவரின் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, "மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.


அரசியல் சாசனத்தை மீறும் வகையில் வாக்காளர்களிடமிருந்து தேவையற்ற அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"அறிவிக்கப்படும் இலவசங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மட்டுமல்ல. அரசியலமைப்பின் தன்மையை பாதிக்கிறது" என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிவ் எட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளும், 56 மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் உள்ளன. நாட்டில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை சுமார் 2,800 ஆகும்.