Sadhguru Brain Surgery: ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குருவை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.


கோவையில் ஈஷா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஈஷா மையத்தின் நிறுவனராக சத்குரு ஜக்கி வாசுதேவன் உள்ளார். இங்கு பிரமாண்டமாக இருக்கும் ஆதியோகி சிலையை காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். 


சத்குருவுக்கு அறுவை சிகிச்சை:


சமீபத்தில் வந்த மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு கலந்து கொண்டார். மேலும், சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். 


இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சத்குரு ஜக்கி வாசுதேவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த சில நாட்களாக  ஒற்றை தலைவலி இருந்துள்ளது.  கடந்த 14ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதோடு, அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது.






இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.


”சத்குரு மீண்டு வருவார்"


மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த ரத்தக்கசிவை சரி செய்தனர்.  இதனை அடுத்து, சத்குருவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமுடன் இருப்பதாகவும், தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்தது. 


இதுகுறித்து சத்குரு பேசியப்படி வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில், "மூளையில் சிகிச்சை செய்யப்பட்டு, நலமுடன் இருப்பதாகவும், டெல்லி அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை மேற்கொண்டதாகவும்" தெரிவித்தார். சினிமா பிரபலங்கள்,  ஈஷா பக்தர்கள் என பலரும் சத்குரு விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர். 






இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்குருவை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ”சத்குருவிடம் பேசினேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.