பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக புகாரையடுத்து, தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை பாய்ந்தது.
குண்டு வெடிப்பு:
பெங்களூரில் நடைபெற்ற ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லேஜே ”தமிழ்நாட்டில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு குண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள கண்டனத்தில், “பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள ஒன்றிய பா.ஜ.க. இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சுக்கு, உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார், மேலும் திமுக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.