பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மிசோரத்தை தவிர்த்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.

  


தெலங்கானாவை தவிர்த்து மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 
மத்திய பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. 230 தொகுதிகளில் 165 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 64 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.


காங்கிரஸ் வசமான தெலங்கானா:


அதேபோல, ராஜஸ்தானில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 115 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 70 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. சத்தீஸ்கரின் 90 தொகுதிகளில் பாஜக 56 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ், 34 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. ஏன் என்றால், மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால், அதை எல்லாம் தாண்டி பாஜக வெற்றிபெற்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. இதை எல்லாம் தாண்டி காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலாக மாறியுள்ளது தெலங்கானா மாநில தேர்தல் முடிவுகள். தெலங்கானா மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்


யார் இந்த சுனில்?


ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, நடத்தப்பட்ட முதல் இரண்டு தேர்தல்களிலும் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதியே வெற்றிபெற்றது. இப்படிப்பட்ட சூழலில், பெரும் சவால்களுக்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி. இவர், மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.


காங்கிரஸ் வெற்றிக்கு இரண்டாவது முக்கிய காரணமாக சொல்லப்படுவர் சுனில் கனுகொலு. கர்நாடாகவை தொடர்ந்து, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் அமைத்து கொடுத்தவர். இவர் அமைத்து கொடுத்த வியூகமே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிக்கான பார்முலாவாக மாறியுள்ளது.


கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட சுனில் கனுகொலு, முக்கியமான தேர்தல் வியூக அமைப்பாளர்களில் ஒருவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனுகொலுவை, தேர்தல் ஆலோசனைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு கே.சி.ஆர் அழைத்தார். ஆனால், கனுகொலு அந்த வாய்ப்பை நிராகரித்து, அதற்கு பதிலாக காங்கிரஸில் சேர்ந்தார்.


ராகுல் காந்தியின் தேர்தல் ஆலோசகராக சுனில் கனுகொலு அறியப்படுகிறார். பாரத் ஜோடோ யாத்ராவுக்கு வியூகம் அமைத்து கொடுத்தவர்.
காங்கிரஸ் கட்சிக்கு முன்பு, அதிமுக, பாஜக மற்றும் திமுகவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.