அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மிசோரத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் தெலங்கானா தவிர்த்து மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. 230 தொகுதிகளில் 165 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 64 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
4 மாநில தேர்தலில் பாஜக அசுர வெற்றி:
அதேபோல, ராஜஸ்தானில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 115 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 70 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. சத்தீஸ்கரின் 90 தொகுதிகளில் பாஜக 56 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ், 34 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினாலும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அவை அனைத்தையும் பொய்யாக்கி மேற்குறிப்பிட்ட 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
"நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்"
இந்த நிலையில், நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மக்களாட்சிக்கு தலைவணங்குகிறோம். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் முடிவுகள், பாஜகவின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் இந்திய மக்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது.
இந்த மாநில மக்களின் உறுதியான ஆதரவிற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். உழைக்கும் கட்சி காரியகர்த்தாக்களுக்கு நன்றி. முன்மாதிரியாக உழைத்துள்ளனர். அவர்கள் அயராது உழைத்து நமது வளர்ச்சி திட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார்.
தெலங்கானா தேர்தல் முடிவு குறித்து பேசிய பிரதமர் மோடி, "தெலங்கானாவின் அன்புக்குரிய சகோதர, சகோதரர்களே. பாஜகவுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும்.
தெலங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது. மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். ஒவ்வொரு பாஜக தொண்டரின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.