இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், 40 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டது.


முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி:


காங்கிரஸ் வெற்றிபெற்றபோதிலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. முதலமைச்சர் யார் என்பதில் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த  முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங்கின் மனைவியும், கட்சியின் தற்போதைய தலைவியுமன பிரதிபாவிற்கும், சுக்விந்தர் சிங் சுக்குவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆங்காங்கே இருதலைவர்களின் தொண்டர்களிடையே மோதலும் ஏற்பட்டது.






முதலமைச்சர் பெயர் அறிவிப்பு:


இதையடுத்து, சத்தீஷ்கர் முதலமைச்சரும், இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் கண்காணிப்பாளருமான பூபேஷ் பாகல் தலைமையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில்,  கடந்தமுறை சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக இருந்த சுக்விந்தர் சிங் சுக்குவை இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது. எம்.ஏல்.ஏக்கள் உடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகல், ஆளூநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் எளிமையான முறையில், சுக்விந்தர் சிங் சுக்கு இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார். அதோடு, முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார் எனவும் கூறினார்.


யார் இந்த சுக்விந்தர் சிங் சுக்கு:


தேர்தலின் போது பரப்புரை குழு தலைவராக செயல்பட்ட சுக்விந்தர் சிங் சுக்கு, ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நாடான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.  இமாச்சலப் பிரதேச காங்கிரஸின் முன்னாள் தலைவரான சுக்கு, நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடான் தொகுதியில் இருந்து மட்டும் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். மேலும், கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.  வழக்கறிஞரான அவர், காங்கிரஸ் கட்சியின் மாணவரணியான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மூலம் அரசியலில் குதித்தார். 


இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங்குடன் அவர் சுமூகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மூத்த தலைவரான வீரபத்ர சிங், ஆறு முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இமாச்சல் அரசியலை பொறுத்தவரை, 25 ஆண்டு கால மாநில அரசியலை பா.ஜ.க.வின் பிரேம்குமார் துமாலும், காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கும்தான் ஆதிக்கம் செலுத்தினர். வீரபத்ர சிங் காலமான பிறகு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி அவரின் மனைவி  பிரதிபா சிங்குக்கு சென்றது.


அரசியல் வாழ்க்கை:


சுக்குவை பொறுத்தவரை, மன்னர் குடும்பத்தில் பிறந்த வீரபத்ர சிங் போல் அல்லாமல் சமூக ஆர்வலராக பொது வாழ்க்கையை தொடங்கினார். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் படித்த அவர், 1980களில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். அவர் சிம்லாவில் இரண்டு முறை முனிசிபல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் 2008 இல் மாநில காங்கிரஸின் செயலாளராக ஆனார். பின்னர், மாநில தலைவர் பதவி சுக்விந்தர் சிங் சுக்குவிற்கு வழங்கப்பட்டது.