மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் 1100 பேர் தற்போது உக்ரைனில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவை கூட்டத் தொடரில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாக்‌ஷி லெகி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.  


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த 10 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின்மீது குண்டு வீசிய காட்சிகளும் வைரலாகின. 


உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயிலச் சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே இந்திய மருத்துவ சங்கம் (IMA) மருத்துவக் கல்விக்கு இந்தியாவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்குக் கடிதம் எழுதியது. 


மத்திய அரசு நிராகரிப்பு


எனினும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வழிமுறைக்கு இடமில்லை என்று தெரிவித்த அரசு, மாணவர்களுக்குத் தளர்வு செய்து கொடுத்தால், அது இந்தியாவின் மருத்துப் படிப்புடைய தரத்தையே பாதிக்கும் எனவும் விளக்கம் அளித்தது. 




உஸ்பெகிஸ்தானில் சேர்ந்து படிக்கலாம்


இந்நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களில் ஒரு பகுதியினர் உஸ்பெகிஸ்தானில் சேர்ந்து படிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் தில்ஷோத் அகாதோவ், இந்திய மாணவர்கள் உஸ்பெகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான தற்காலிக சேர்க்கைக் கடிதத்தை, கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழங்கினார். 


இந்த நிலையில், உக்ரைனில் தற்போது இந்திய மாணவர்கள் 1100 பேர் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவை கூட்டத் தொடரில் நேற்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாக்‌ஷி லெகி, இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.  


இதுகுறித்து மேலும் பேசிய அவர், "போர் தொடங்கிய பிறகு உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். இந்நிலையில் 1100 இந்திய மாணவர்கள் தற்போது உக்ரைனில் உள்ளனர். 


இந்தியக் குடிமக்கள் எல்லையைத் தாண்டுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உக்ரைனில் ஏற்கெனவே மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்களுக்கு உதவ ஏற்கெனவே இந்திய மருத்துவ ஆணையம் போதிய முயற்சிகளை எடுத்துள்ளது" என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாக்‌ஷி லெகி தெரிவித்துள்ளார்.