கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.


கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீர்க்கமான போரை அறிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


இதன் காரணமாகத் தீவிரவாதத்துக்குத் துணை போகும் நடவடிக்கைகள் முடக்கப்படும் என்றும், நாட்டில் ஊழல் பெருமளவில் குறையும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவு, இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகவும், பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.


கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ள போட்டபோது, 15.44 லட்சம் கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.


ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருந்த 98.96 விழுக்காடு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக 2018ஆம் ஆண்டு தெரிவித்தது. இதன் மூலம் பெருமளவு பணம் புதிய பணமாக மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


இதன் மூலம் கறுப்புப் பணம் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை என்பது தெளிவாகிறது. அதனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். இச்சூழலில், பணமதிப்பிழப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 


இதை தொடர்ந்து, இந்த விவகாரம் இந்தாண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்துள்ளது. பணமதிப்பிழப்பு தொடர்பாக காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே நடந்த நாடாளுமன்ற விவாத்தில் அனல் பறந்தது.


நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் மத்திய பாஜக அரசின் முடிவை விமர்சித்து பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "புழக்கத்தில் உள்ள பணமும், கள்ள நோட்டும் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை விரும்பிய இலக்குகளை அடையவில்லை.


புழக்கத்தில் இருந்த பணம், 2016இல் 18 லட்சம் கோடி ரூபாயிலிருந்து தற்போது 31 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் அதிகரித்துள்ளன. இது, அதன் இலக்குகளை அடையத் தவறியதைக் குறிக்கிறது.


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தின் நிலை மோசமாக உள்ளது. கறுப்புப் பணத்தை மீட்பதற்காகவும், கள்ள நோட்டுகள் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் எந்த நோக்கமும் நிறைவேறவில்லை" என்றார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பரவலாக இருந்த ஊழல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி அளிப்பதை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பெரிய நடவடிக்கை எடுத்தது. 


பயங்கரவாதம், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. நாட்டை பிளவுபடுத்தும் கும்பல் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது" என்றார்.