சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்காக டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மொத்தமாக 10 கோடி ரூபாய் அளித்ததாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா, ஓபிஎஸ் அணிகள் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால், அச்சின்னம் முடக்கப்பட்டது. அப்போது, டெல்லியில் சுகேஷ் சந்தரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 


இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, சசிகலா அணி தரப்பில் குறுக்குவழியில் முயற்சிகள் நடந்ததாகவும் அப்போது, சசிகலா தரப்பு தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் அட்வான்ஸாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.


அந்த விசாரணையில்தான், அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதன் பின்னர், அவர் அடைக்கப்பட்டிருந்த டெல்லி ரோகினி சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளுக்கு சுகேஷ் சந்திரசேகர் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது. சிறைக்குள் இருந்து கொண்டு அவர் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


 






இந்தநிலையில்தான், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் அளித்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவால் பேசுகையில், "இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை.குஜராத் தேர்தல் மற்றும் மோர்பி பாலம் விபத்து ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


இவை அனைத்தும் கட்டமைக்கப்பட்ட பொய்கள். அவர்கள் மோர்பி விபத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். குஜராத் தேர்தலை முன்னிட்டு பீதியில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. பாஜகவும் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டன. இந்த முறை, ஆம் ஆத்மி கட்சியால் அவர்கள் போராடுகிறார்கள். 


சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு ஒரு மோசடியாளரை பயன்படுத்தி அவர்கள் மிகவும் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். மேலும், மணீஷ் சிசோடியா மீது மதுபான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தவும் முயற்சித்தனர்" என்றார்.


சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மிக்கு 60 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அதில் மாநிலங்களவை இடத்திற்காக 50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதில், தான் சிறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் சுகேஷ் கூறியுள்ளார். எனவே, பாதுகாப்பு வேண்டி சத்யேந்தர் ஜெயினுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.