மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது பங்குரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பிஷ்னுபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவருக்கு வயது 37. இந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியரான அவர் தான் பணிபுரியும் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி அதாவது 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு சென்று தன்னுடைய பெற்றோர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை கைது செய்தனர்.




போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியானது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 37 வயதாகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமணத் தடை இருப்பதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதற்காக, கோவில் பரிகாரம் என்று சுற்றி வந்த ஆசிரியர் மாந்திரீகர் ஒருவரை சந்தித்துள்ளார்.


அந்த மாந்திரீகர் ஆசிரியரிடம் திருமணத் தடை நீங்க இளம் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் கொண்டு வருமாறும், அவ்வாறு கொண்டு வந்தால் அதை வைத்து செய்யும் பூஜையால் திருமணத் தடை நீங்கும் என்றும் மோசமான யோசனையை கூறியுள்ளார். இந்த மோசமான யோசனையை கேட்டுக்கொண்ட அந்த ஆசிரியர், தான் பணியாற்றிய பள்ளியிலே படித்து வந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.




இதைக் கேட்ட போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த ஆசிரியர் மட்டுமின்றி ஆசிரியருக்கு விபரீத யோசனை அளித்த அந்த மாந்திரீகர், ஆசிரியரின் ஆலோசகர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


மாந்தீரிகரின் முட்டாள்தனமான பரிகார யோசனையை கேட்டு, இளம் சிறுமியை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆசிரியருக்கும், அந்த மாந்திரீகருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.