உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேபரேலியில் மதுபானக் கடை ஒன்றில் இருந்த பாட்டிலை எடுத்து குரங்கு ஒன்று பீர் அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.


எங்களது கடையில் இருந்து பீர் பாட்டில்களை குரங்கு ஒன்று திருடிச் செல்வதாகவும், எங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பீர் பாட்டிலை குரங்கு பறித்துச் செல்வதாகவும் மாவட்ட கலால் துறை அதிகாரி ராஜேந்திர பிரதாப் சிங்கிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அந்தத் துறை அதிகாரிகள் கூறுகையில், "சம்பந்தப்பட்ட குரங்கை பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.


 






முன்னதாக, சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய் உடைந்து பயணிகள் மீது தண்ணீர் சீறிப் பாய்ந்த வீடியோ வைரலானது.


ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைந்த நிலையில், அது ரயிலில் பயணம் செய்த பயணிகள் மீது சீறிப் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கம் மாநிலத்தின் ஒரு இரயில்வே நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் இருந்திருக்கிறது. இந்த சூழலில் அப்போது தண்ணீர் வெளியாவதை தடுக்க தடுப்பு ஏதோ வைத்திருக்கின்றனர். அந்த தடுப்பு உடைந்த நிலையில் தண்ணீர் பீரங்கியில் இருந்து குண்டு வெளியாவதை போல ஒரே நேர்க்கோட்டில் சீறிப்பாய்ந்த நிலையில் அதனை ஒருவர் வீடியோ எடுக்க துவங்குகிறார். அந்த சமயத்தில் அங்கு வந்த இரயில் ஒன்று தனது இயக்கத்தை குறைத்து, நிற்ப்பதற்கு ஆயத்தமாகிறது. 


ரயில் குழாயில் இருந்து வெளியாகும் தண்ணீர்  ரயில் தண்டாவளம் வரையில் பாய்ந்த நிலையில் , அந்த பகுதியில் வந்த இரயிலில்  படிக்கட்டுகள்  மற்றும் சன்னல் ஓரங்களில் அமர்ந்திருந்த பயணிகளையும் நனைத்து விடுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத இரயில் பயணிகள் திடுக்கிட்டு போவதையும் வீடியோ காட்டுகிறது.


கடந்த புதன் கிழமையன்று அபி என்ற ட்விட்டர் பயனாளர் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 26,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும்  இந்த வீடியோ பெற்றுள்ளது. இதற்கு கேப்ஷனாக “உங்கள் சேவையில் இந்திய இரயில்வே“ என குறிப்பிடப்பட்டுள்ளது. 30 வினாடி காட்சிகளை கண்ட நெட்டிசன்கள் பலர் நகைச்சுவையாகவும், சிலர் சீரியஸாகவும் இந்த வீடியோவிற்கு கீழே கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றன. 


ஒருவர் “பலர் காலையில் குளிக்கவில்லை என்பது ரயில்வேக்கு கூட தெரியும். அதனால்தான் உதவி செய்கிறது “ என்றார். மற்றொருவர் “அது ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்" என்றார். ஒருவர் “ குறைந்த பட்சம் ஒரு நபராவது குழாயை துணியால் அல்லது வேறு ஏதாவது கொண்டு மூடியிருக்கலாம்.யாருக்கும் கவலை இல்லை “ என்றார். மற்றொருவர் “ ரயில்வேயின் தவறை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்களும் அங்கு இருந்தவர்களும் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறீர்கள் என்பதுதான் எனக்கு தெரிகிறது என்றார்.