ஒரு நகரம் வளர்ந்த கதையை அந்த நகரத்தில் உள்ள தெருவின் வளர்ச்சியை வைத்து அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு மும்பையின் வரலாற்றிற்கும் கலாச்சாரத்திற்கும் பிரதிபலிப்பாக வளர்ந்து நிற்கிறது மும்பையின் பெண்டி பஜார் பகுதி. மும்பை நகரம் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக மாறியதற்கும், பெண்டி பஜார் வளர்ந்ததற்கும் இடையில் மிகப்பெரிய தொடர்பு உண்டு.
மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள இந்தப் பகுதி மார்கெட்டின் பின்புறம் இருந்ததால், பிரிட்டிஷார்களால் `Behind the bazaar' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பெயர் மருவி, அப்பகுதி மக்களால் பெண்டி பஜார் என்ற பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் போஹ்ரா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ரமலான் நோன்பு மாதத்தில் இந்தப் பகுதியில் விற்பனை செய்யும் உணவுப் பொருள்கள் மும்பை முழுவதும் பரவலாக விரும்பி உண்ணப்படுபவை.
தாவூதி போஹ்ரா முஸ்லிம், மேமன், குஜராத்தி, சிந்தி, பார்சி, கட்ச் மக்கள் எனப் பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் இந்தப் பகுதி சுமார் 150 ஆண்டுக் காலப் பழைமை வாய்ந்தது. இங்கு வாழ்வாதாரம் தேடி வந்த மக்கள் ஹார்ட்வேர் பொருள்கள், துணிகள், பழங்காலப் பொருள்கள் என வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். பெண்டி பஜாரில் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களால் அப்பகுதியைச் சுற்றி பல்வேறு சிறிய சந்தைகள் உருவாகி வருவதை இன்றுவரை நாம் காண முடியும்.
பிரிட்டிஷ் காலத்தில் பெண்டி பஜார் பகுதியில் ஆண்கள் தனியாக தங்குவதற்கு ஏற்றவாறு விடுதிகள் இயங்கி வந்தன, பிற்காலத்தில் வியாபாரம் பெருகிய பின்பு, குடும்பங்களுடன் இங்கு குடியேறத் தொடங்கினர். அதன்பிறகு தீப்பெட்டி போன்ற அளவிலான வீடுகளே மக்கள் வாழும் இடங்களாக மாறின. இப்பகுதியின் கட்டமைப்பு மோசமாக இருக்கும் சூழலில், 3200 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். குறுகிய தெருக்கள், போதிய பாதுகாப்பு இல்லாமை, சுகாதாரக் குறைபாடு ஆகியவை இப்பகுதியில் மிகப்பெரிய பிரச்னைகளாக கருதப்படுகின்றன.
2009ஆம் ஆண்டு, தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த 52வது தலைவர் டாக்டர் சையத்னா முகமது புர்ஹானுத்தீன் பெண்டி பஜார் பகுதிக்கு அளித்த நிதியுதவி இப்பகுதியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. சைஃபி புர்ஹானி மேம்பாட்டு அறக்கட்டளை என்ற பெயரில் இங்கு தொடங்கப்பட்ட முயற்சிகளால் இப்பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன.
9 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் படி, சுமார் 16.5 ஏக்கர் நிலத்தில் 250 சிதிலமடைந்து கட்டிடங்கள், 3200 குடும்பங்கள், 1250 கடைகள் ஆகியவற்றிற்குப் புதிய பாதை பிறந்துள்ளது. மேலும் புதிதாஅ கட்டிடங்கள், தரமான சாலைகள், காற்றோட்டமுள்ள இடங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
பெண்டி பஜார் பகுதி மக்களின் தற்சார்பு வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது அதன் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. `அல் சாடா’ என்ற பெயரில் தற்போது இப்பகுதியில் இரண்டு உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டு, இப்பகுதியை பிரபலமாக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த காலத்தின் சின்னமாக இருக்கும் பெண்டி பஜார் தற்போது எதிர்காலத்தின் வளர்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.