அருணாச்சலப் பிரதேசத்தில் நீர் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்றுதான் காமெங் நதி. இந்நதி கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ளது. நதியின் நீர் கருப்பு நிறமாக மாறியதோடு நதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்துக் கிடக்கின்றன. அந்த மீன்களை பொது மக்கள் யாரும் சமைக்க எடுத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


நதியில் ஏதோ ஒன்று அதிகளவில் கலக்கப்பட்டதால் இந்த மாதிரியாக நிறம் மாறியிருக்கிறது என பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு லிட்டர் தண்ணீரில் 300 முதல் 1200 மில்லி கிராம் வரையிலேயே டிடிஎஸ் எனப்படும்  total dissolved substances இருக்க வேண்டும். ஆனால் கெமாங் நதியில் ஒரு மில்லி கிராமில் 6,800 கிராம் டிடிஎஸ் இருப்பதாக மாவட்ட மீன் வளர்ச்சிக் கழக அலுவலர் ஹலி தாஜோ தெரிவித்துள்ளார்.


ஆனால், கிராமவாசிகளோ இது சீனாவின் சதிச் செயல் எனக் கூறுகின்றனர். அருணாச்சல எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா கட்டுமானங்கள் அதிகளவில் செய்து வருவதால் நதிநீர் மாசுடைவதாகக் கிராமவாசிகள் கூறுகின்றனர்.


எல்லைத் தகராறு:


இந்தியா - சீனா எல்லையில் உள்ள மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் சீன ராணுவம் தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் சட்ட விரோதமாக நுழைவது, அங்குள்ள மக்கள் வாழும் இடங்களில் ராணுவ அணிவகுப்புகள் நடத்துவது எனத் தொடர்ந்து இந்திய நிலப்பரப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகிய மாநிலங்களின் எல்லைகளின் வழியாக இந்தியாவுக்குள் அடிக்கடி நுழையும் சீன ராணுவம் அதன் ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது, அப்பகுதிகளில் ரிசர்வ் ராணுவத்தினரைக் கொண்டு நிரப்புவது முதலான சட்டவிரோத செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 


லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ.தொலைவுக்கு இந்திய, சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 1962-ம் ஆண்டில் லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. கடந்த 2017 ஜூன்மாதம் சிக்கிம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சுமார் 72 நாட்களுக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர்.




இந்திய சீன எல்லையில் எது நிகழ்ந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் இந்திய ராணுவம் முழுவதுமாகத் தயார் நிலையில் இருப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் நிலப்பரப்பையும், வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் `கோழியின் கழுத்து’ என வர்ணிக்கப்படும் சிலிகுரி பகுதி கைப்பற்றப்பட்டால் மிகவும் ஆபத்தாக மாறும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் சிலிகுரி பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.