அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று சஞ்சய் யாதவ் என்பவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையின்போது ஒமிக்ரான்(Omicron) பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.
நீதிபதிகள் கூறும்போது, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகரிக்கும்போது முழுமையாக அல்லது பகுதிநேரமாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இண்டாவது அலையின்போதே நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பலரும் இதனால் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் மிகவும் அருகில் உள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற முடியாத இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டுவதை உயர்நீதிமன்றம் கவனித்து வருகிறது.
இதை சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால், இதன் விளைவுகள் இரண்டாவது அலையை விட மோசமாக இருக்கும். இதனால், இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் பேரணிகள் மற்றும் மக்கள் கூடுவதை நிறுத்தவும், தங்களது தேர்தல் பிரசாரங்களை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலமாக மேற்கொள்ள அரசியல் கட்சிகளை அறிவுறுத்த வேண்டும்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை வாய்ப்பிருந்தால் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம். ஏனென்றால் மக்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியும்.
கொரோனா தடுப்பூசி பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பேரணிகள், கூட்டங்களை நிறுத்துவது மற்றும் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.
நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணங்களை மேற்கண்ட மாநிலங்களில் மேற்கொள்ள உள்ளனர்.
ஆனால், நாட்டில் தற்போது ஒமிக்ரானின் தீவிரத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, அலகாபாத் நீதிமன்றம் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Ashwin on Virat - Shasthri duo: அஷ்வின் மட்டும்தான் தூக்கி எறியப்பட்டாரா? கோலி - சாஸ்திரி கூட்டணியின் இன்னொரு முகம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்