”பசுக்கள் பற்றிய பேச்சு சிலருக்கு குற்றமாக இருக்கலாம். பசுக்கள் நம்மால் தாயாக மதிக்கப்படுகிறது” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். 


வாரணாசியின் கர்க்கியானில் உள்ள உத்தரப்பிரதேச அரசின் தொழில் மேம்பாட்டு ஆணையப் பூங்காவில் ‘பனாஸ் பால்வளத் தொகுப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்தப் பால்பண்ணை ரூ.475 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பாலினைப் பதப்படுத்தும் வசதி கொண்டது. பனாஸ் பால்பண்ணையோடு தொடர்புடைய 1.7 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.35 கோடியையும் பிரதமர் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்தார்.


பின்னர், கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர்,  “பசுக்கள் பற்றிய பேச்சு சிலருக்கு குற்றமாக இருக்கலாம். பசுக்கள் நம்மால் தாயாக மதிக்கப்படுகிறது.  எருமைகளைப் பரிகாசம் செய்கின்றவர்கள் இத்தகைய கால்நடைப் பராமரிப்பு மூலம் நாட்டின் 8 கோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்” என்று கூறினார். 


இந்தியாவின் பால்வளத்துறையை வலுப்படுத்துவது எமது அரசின் உயர் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக பனாஸ் காசி தொகுப்புக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.






கால்நடைகளுக்கு உருவாகும் கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவது பற்றியும் அவர் பேசினார். 6-7 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் பால் உற்பத்தி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் 22 சதவீதம் இன்று இந்தியாவில் உற்பத்தியாகிறது. உத்தரப்பிரதேசம் இன்று நாட்டில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மட்டுமின்றி பால் வளத்துறை விரிவாக்கத்திலும் கணிசமான அளவு முன்னேறி உள்ளது” என்று பிரதமர் கூறினார்.


எதிர்க்கட்சிகளை சாடிய அவர், உத்தரப்பிரதேசத்தின் அரசியலை சாதி, சமயம், மதம் என்ற முப்பட்டைக் கண்ணாடி மூலம் பார்ப்பவர்கள் இரட்டை என்ஜின், இரட்டை ஆற்றல் என்ற பேச்சால் பிரமித்துப் போயுள்ளனர். 




 


இத்தகையவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள், குடிநீர், ஏழைகளுக்கு வீட்டுவசதி, எரிவாயு இணைப்புகள், கழிப்பறைகள் ஆகியவற்றை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கருதவில்லை. 


“உத்தரப்பிரதேசத்தின் மக்கள் ஏற்கனவே பெற்றதற்கும் இன்று நமது அரசின் மூலம் பெறுவதற்கும் இடையேயான வேறுபாட்டை தெளிவாக அறிவார்கள். உத்தரப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை நாங்கள் விரிவுபடுத்துகிறோம். அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு வளர்ச்சியையும் செய்கிறோம்” என்று குறிப்பிட்டு பிரதமர் உரையை நிறைவு செய்தார்.


உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


கட்டுரையின் ஆதாரம் - பிரதமர் அலுவலகம்