Railway Accident: வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் இருந்து விவாகரத்தும் பெற்றுள்ளார்.
ஒற்றை வார்த்தையால் வந்த வினை
ரயில்வேதுறையை சேர்ந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவரும், அவரது மனைவியும், ஒரே வார்த்தையால் நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளனர். அவர்கள் இடையேயான குடும்பச் சண்டையால் ரயில்வேதுறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதோடு, திருமண வாழ்க்கையே குழப்பத்தில் முடிந்துள்ளது. சர்ச்சைக்குள்ளான ஸ்டேஷன் மாஸ்டர் விசாகப்பட்டினத்தில் வசிக்கும் நிலையில், அவரது மனைவி சத்திஸ்கரின் துர்க் பகுதியில் வசிக்கிறார். அவர்கள் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின்போது, ஸ்டேஷன் மாஸ்டர் சொன்ன ”ஒகே” என்ற ஒற்றை வார்த்தை தான் பெரும் பிரச்னைக்கு காரணமாகியுள்ளது.
வேலையின் போது வெடித்த வாக்குவாதம்
இந்த தம்பதிக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது . அந்த பெண் தனது முன்னாள் காதலனுடன் திருமணத்திற்கு பிறகும் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் கணவருடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஸ்டேஷன் மாஸ்டர் பணியில் இருந்தபோது, மீண்டும் தனது மனைவியுடன் செல்போன் உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கடினமான வார்த்தைகளை கூறிக்கொள்ள, கோபமடைந்த ஸ்டேஷன் மாஸ்டர் ”எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து பேசிக்கொள்ளலாம், ஓகே?” என கூறிவிட்டு செல்போனை கட் செய்துள்ளார்.
ரயில்வேதுறைக்கு ரூ.3 கோடி நஷ்டம்
இதனிடையே, ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியுடன் பேசும்போது தனது மைக்ரோஃபோனை ஆன் செய்து வைத்துள்ளார். அப்போது, அவர் சொன்ன ”ஓகே” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் எதிர்தரப்பில் இருந்த சக பணியாளர் தவறாக புரிந்துகொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட பாதைக்குள் சரக்கு ரயிலை செலுத்தியுள்ளார். நல்வாய்ப்பாக அங்கு விபத்து எதுவும் ஏற்படாவிட்டாலும், நக்சல் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குள் விதிகளை மீறி இரவில் ரயில் செலுத்தப்பட்டதால், ரயில்வேதுறைக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கமும், விவாகரத்தும்:
இதையடுத்து பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக, அந்த ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விசாகப்பட்டினம் குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால், தனது கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், மைத்துனருடன் கணவருக்கு தகாத உறவு இருப்பதாகவும் புகாரளித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தை நாடி, வழக்கை துர்க் குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றினார். அதில், ஸ்டேஷன் மாஸ்டரின் விவாகரத்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தை நாடினர். அதன் விசாரணையின் முடிவில், மனைவியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தொலைபேசியில் மனைவியின் தொடர்ச்சியான வாதங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவை "மனதளவில் கொடுமைப்படுத்தும்" செயல் என நீதிபதி சாடியுள்ளார்.