இந்தியாவில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம். இதையடுத்து, இந்த ஒப்பந்தங்களுடன் மோடியை இணைத்து, ஒரு பெரும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வைத்துள்ளது. அப்படி என்ன சொல்லி இருக்கிறார்கள். விரிவாக பார்க்கலாம்.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்
Low Earth Orbit செயற்கைக்கோளான ஸ்டார்லிங்க் மூலம், உலகம் முழுக்க இன்டர்நெட் சேவையை வழங்கிவருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனம், சமீபத்தில், இந்தியாவின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து, அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை இந்தியாவில் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவின் உள் பகுதியில் உள்ள குக்கிராமங்களில் கூட, தடையில்லாத இன்டர்நெட் சேவை கிடைக்கும். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க்கின் அதிவேக இன்டர்நெட், ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
ஸ்டார்லிங்க்கில் பிரதமர் மோடியின் லிங்க் - ஜெய்ராம் ரமேஷ்
ஸ்டார்லிங்க்குடன், ஏர்டெல் மற்றும் ஜியா நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது, மோடியின் ஏற்பாடுதான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்டார்லிங்க் உரிமையாளர் எலான் மஸ்க் மூலம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நன்மதிப்பை பெறுவதற்காகவே, மோடி இந்த இணைப்பை ஏற்படுத்தி இருப்பது தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில், ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிறுவனங்கள், தற்போது 12 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் செய்தது எப்படி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எலான் மஸ்க்கை மகிழ்ச்சியடையச் செய்தால், ட்ரம்ப்பும் மகிழ்ச்சியடைவார் என மோடி நம்புவதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள்
இந்தியாவில், மூலோபாய செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு ஏகபோகமாக வழங்குவது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாகிவிடும் என சிபிஎம் தெரிவித்துள்ளது. உக்ரைனிடம் கனிமவளத்தை பெறுவதற்காக, அவர்களின் ராணுவத்திற்கு அத்தியாவசியமாக விளங்கும் ஸ்டார்லிங்க் சேவையை துண்டித்துவிடுவோம் என அமெரிக்கா மிரட்டல் விடுத்ததே அதற்கு ஒரு உதாரணம் எனவும் சிபிஎம் தெரிவித்துள்ளது.
இத்தகைய செயற்கைக்கோள்களை முக்கிய சுற்றுப்பாதைகளை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது நமது இயற்கை வளங்கள், வானிலை, பயிர்கள், ராணுவ தரவுகள் உள்ளிட்ட முக்கிய தரவுகளை சேகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும், அது தேசிய மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்றும் சிபிம் கூறியுள்ளது.
ஸ்டார்லிங்க்கை இந்தியாவிற்கு அனுமதிப்பதற்கு, எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், மத்திய அரசு தற்போது ஒழுங்குமுறை ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மோடி என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.