அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து, I.N.D.I.A. என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை செய்ய இதுவரை மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளது.
இந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்க போவது என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பிரதமர் பதவியில் விருப்பமில்லை என காங்கிரஸ் அறிவித்த போதிலும், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ராகுல் காந்தியே I.N.D.I.Aயின் பிரதமர் வேட்பாளர் என சொல்லி வருகின்றனர்.
I.N.D.I.A கூட்டணிக்கு தலைமை தாங்கப்போவது யார்?
அதேபோல, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரில் ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மம்தாவிடம் கேள்வி எழுப்பியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மம்தாவை, வழியிலேயே துபாய் விமான நிலையத்தில் இலங்கை அதிபர் ரணில் சந்தித்துள்ளார்.
அப்போது, அரசியல் தொடர்பாக முக்கியமான கேள்வி ஒன்றை மம்தாவிடம் இலங்கை அதிபர் எழுப்பியுள்ளார். இரு தலைவர்கள் உரையாடும் வீடியோ சமூக வதைளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், "நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா? என இலங்கை அதிபர் கேட்பதும் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் மம்தா தலையாட்டுவதும் பதிவாகியுள்ளது.
மம்தாவிடம் அரசியல் கேள்வி கேட்ட இலங்கை அதிபர்:
எதிர்க்கட்சி கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்பீர்களா? தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு ஒரே ஆர்வமாக இருக்கிறது? என ரணில் கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத மம்தா, "ஐயோ கடவுளே" என வியப்படைந்தார். பின்னர், சிரித்து கொண்டே, "அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்ததே. மக்கள் ஆதரவளித்தால் நாளை நாம் பதவியில் (அதிகாரத்தில்) அமரலாம்" என்றார்.
மும்பை நகரில் நடந்த I.N.D.I.A.யின் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இந்திய கூட்டணி கட்சிகள் ஒப்பு கொண்டது. பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய விரைவில் முடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அக்கறை சார்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எழுப்ப கூடிய விரைவில் பேரணிகளை நடத்த இந்தியா கூட்டணி தீர்மானித்தது.