டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 18வது மாநாடு கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் சீன பிரதமர் லி கியாங் தலைமையில் அந்நாட்டின் தூதர்கள் கலந்து கொண்டனர். உச்சி மாநாட்டுக்கு வந்த சீனக் குழு, டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஐந்து நடசத்திர விடுதியில் தங்கியிருந்தனர்.
சீன அதிகாரிகள் கொண்டு வந்த மர்ம பை:
இந்த நிலையில், சீன குழுவினர் கொண்டு வந்த சந்தேகத்திற்குரிய பை தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை, 5 நட்சத்திர விடுதிக்கு வந்த சீன அதிகாரிகளில் ஒருவர் வித்தியாசமான வடிவில் பை ஒன்றை கொண்டு வந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
இருப்பினும், தாஜ் பேலஸ் ஹோட்டலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், தூதரக நெறிமுறைகளைப் பின்பற்றி பைகளை கொண்டு வர அனுமதித்தனர். பின்னர், சீன தூதர்கள் தங்கியிருந்த அறை ஒன்றில், ஹோட்டல் ஊழியர் ஒருவர் இரண்டு பைகளுக்குள் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருப்பதை கண்டார்.
இது தொடர்பாக, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சீன தாதர்களிடம் பைகளை சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் குழு கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சீனத் தரப்பு அதை தூதரகம் தொடர்பானவை எனக் கூறி, எடுத்து செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்:
சோதனை செய்ய ஒப்பு கொள்ளாததால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் சீன தூதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில், குறிப்பிட்ட அந்த பையை தூதரகத்திற்கு அனுப்பு சீன அதிகாரிகள் ஒப்பு கொண்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்த சம்பவத்தை விவரித்த அதிகாரி ஒருவர், "பாதுகாப்புக் குழு, சீன தூதரகள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வெளியே சுமார் 12 மணி நேரம் காவலில் நின்றனர். ஆனால், சீன அதிகாரிகள் அவர்களது பைகளை சோதனை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர். சீன தூதுக்குழுவினர், நீண்ட விவாதத்திற்குப் பிறகு, தங்கள் பைகளை தூதரகத்திற்கு எடுத்து சென்றனர்" என்றார்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா முதல்முறையாக தலைமை வகித்ததால் இந்த மாநாடு டெல்லியில் நடத்தப்பட்டது. உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் டெல்லியில் உள்ள ராஜ்காட்டுக்கு சென்ற உலக தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து, டெல்லி உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பதவி பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது.