இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த வந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை கிளப்பின.
மல்யுத்த வீரர்களுக்கு என்ன பிரச்னை?
பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் மல்யுத்த கூட்டமைப்பில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர்.
பெரும் அழுத்தத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இப்படிப்பட்ட சூழலில், மல்யுத்த கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்றார்.
மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை:
கடும் எதிர்ப்புக்கு பிறகும், பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் வெற்றி பெற்றிருப்பது மல்யுத்த வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இதை தொடர்ந்து, மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான சாக்சி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்தார்.
இப்படிப்பட்ட சூழலில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நடத்த தற்காலிக குழு ஒன்றை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
"விளையாட்டு வீரர்கள் தேர்வு உட்பட மல்யுத்த கூட்டமைப்பின் விவகாரங்களை தற்காலிக குழு நிர்வகிக்கலாம். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாகிகள், கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் தொடர்பாக பிரச்னைகள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைப்பில் சிறந்த நிர்வாகத்தை நிலைநிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இது தேவைப்படுகிறது, எனவே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான இடைக்காலத்திற்கு பொருத்தமான ஏற்பாடுகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் செய்ய வேண்டும்" என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் தருண் பரீக் கடிதம் எழுதியுள்ளார்.