Dayanidhi Maaran: இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் கழிவறைகளை சுத்தம் செய்து வருவதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு:
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி, பெரும் சர்ச்சையை வெடித்துள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாநிதி மாறன், "ஆங்கிலம் தெரிந்த காரணத்தால் தான் நமது இளைஞர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே..அவர்கள் நிலையை பாருங்கள். இன்று கட்டடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக் கொண்டு, வீடு கட்டி தருகிறார்கள். சாலையை சுத்தம் செய்கிறார்கள். கழிவறை கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை" என்றார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாஜகவினர் கடுமையாக சாடி வருகின்றனர். இருப்பினும்,
குவியும் கண்டனங்கள்:
தயாநிதி மாறன் பேச்சுக்கு பாஜகவினர் வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தயாநிதி மாறனின் சர்ச்சை கருத்து குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "கருணாநிதியின் கட்சி திமுக. திமுக என்பது சமூக நிதியில் நம்பிக்கை உள்ள கட்சி. அக்கட்சியின் தலைவர் யாராவது உத்தர பிரதேச, பீகார் மக்களைப் பற்றி ஏதாவது பேசியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.
நாங்கள் அதை ஏற்க முடியாது. பீகார் மற்றும் உத்தர பிரதேச மக்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய வருவதாக அவர் கூறுவது கண்டனத்திற்குரியது. இது ஒரே நாடு. மற்ற மாநில மக்கள்களையும் மதிக்கிறோம். இதுபோன்ற கருத்துகளை கூறக்கூடாது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் மக்கள் மரியாதை அளிக்க வேண்டும்" என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் உதயநிதி, "கொசுக்கள், டெங்கு, காய்ச்சல் ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. சனாதனத்தை நாம் எதிர்ப்பதற்கு பதிலாக அதை ஒழிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சைசைய கிளப்பிய நிலையில், தற்போது தயாநிதி மாறன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.