ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் சென்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் எண்ணெய் டேங்கரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோசமான விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் மணிக்கு 230 கி.மீ வேகத்தில் ஓட்டப்பட்டதாக கூறப்படுகிறது.


மணிக்கு 230 கி.மீ வேகத்தில் ஓட்டப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ்:


காரில் சென்ற மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு, குர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அவர்கள் சண்டிகரைச் சேர்ந்த திவ்யா மற்றும் தஸ்பீர், டெல்லியைச் சேர்ந்த விகாஸ் என்பது தெரிய வந்துள்ளது.


எண்ணெய் டேங்கர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ராம்ப்ரீத்தும்  அவரது உதவியாளர் குல்தீப்பும் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் இந்திய மதிப்பு 10 கோடி ரூபாய்க்கு மேலிருக்கும். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் காரின் முன்புறம் மோசமாக சேதம் அடைந்திருப்பதும் என்ஜின் தீப்பிடித்து எரிவதும் பதிவாகியுள்ளது. சேதம் அடைந்த காரின் பாகங்கள் சம்பவ இடம் முழுவதும் பரவி கிடக்கிறது. 


சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இதுகுறித்து விவரிக்கையில், "அன்று, விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், ஐந்தாறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அதற்குள் விபத்து நடந்துவிட்டது. டேங்கர் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் காரில் யாரும் இல்லை. அவர்கள் சென்றுவிட்டனர்" என்றார்.


நடந்தது என்ன?


இதுகுறித்து நுாஹ் காவல்துறையின் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் கூறுகையில், "டேங்கரில் இருந்தவர்கள் இந்த வழித்தடத்தில் வழக்காக செல்பவர்கள். விபத்து ஏற்பட்ட போது இரு வாகனங்களும் டெல்லியில் இருந்து வந்து கொண்டிருந்தன. கார் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த நேரத்தில், கார் இயக்கப்பட்ட வேகத்தை எங்களால் உறுதிப்படுத்த முடியாது. விசாரணை நடந்து வருகிறது.


விபத்து நடந்த இடத்தில் U- டர்ன் செய்யும் இடம் உள்ளது. ஆனால், நாங்கள் இன்னும் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். நாங்கள் தற்போது காயமடைந்தவர்களின் வாக்குமூலங்களை எடுத்து வருகிறோம், இதற்காக விரைவில் குர்கான் மருத்துவமனைக்குச் செல்வோம்" என்றார்.


அதிகரிக்கும் சாலை விபத்துகள்:


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.



2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.