கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் போட்டு தொடங்குவதற்கு முன்பு அங்கே அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கான தற்காலிக கேலரி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


கால்பந்து போட்டியின் போது தற்காலிக பார்வையாளர் கேலரி நிலை தடுமாறி சரிந்ததில் இருநூறு பேர் காயமடைந்தனர் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.






மலப்புரம் பூங்கோடு மைதானத்தில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் போட்டி தொடங்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது. வீடியோ காட்சிகளின்படி, சம்பவத்தை அடுத்து, அமைப்பாளர்கள் மற்றும் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மக்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடுவதையும் காணமுடிந்தது.காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவின் வடக்கு மாவட்டத்தில் இப்படியான கால்பந்து போட்டிகள் மிகவும் பிரபலம் . இதனால் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடுவது உண்டு.


பனை மரத்தால் செய்யப்பட்ட மர சட்டங்களால் இந்த கேலரி அமைக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமானவர்கள் கேலரியில் அமர்ந்ததால் எடை தாங்காமல் இது சரிந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழாக்குழுவினர் சரியாக விழாவை வழிநடத்தாததே இந்த விபத்துக்கு காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்