ஆபத்தான சாங்க்லா ஆக்ஸிஸ் பகுதியில் இருந்து பெண்கள், மற்றும் குழந்தைகள் உட்பட சிக்கித் தவித்த 100 சுற்றுலா பயணிகளை போலீசார் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






லே- லடாக்கில் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் லே- லடாக் என்பது இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத் தளமாகும். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரளமான மக்கள் அங்கு படை திரண்டு செல்கின்றனர். ஆனால் இந்த இரண்டு நாள் தொடர் பனிப்பொழிவின் காரணமாக பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர்.


சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் இந்த சூழலில் உதவிக்கோரிய காரணத்தால் இந்திய ராணுவம் மற்றும் லடாக் காவல் துறையினரால் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 


லடாக் காவல்துறையின் UTDRF மீட்புக் குழுவைத் தவிர, ராணுவம் மற்றும் GREEF மீட்புக் குழுக்களும் மீட்புப் பணியில் தீவிரமாகப் ஈடுபட்டது. அவர்களின் கூட்டு முயற்சியால், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. மேலும் மக்கள் அனைவரும் பத்திரமாக லேக்கு வெளியேற்றப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பனியால் நிறைந்து, மிகவும் வழுக்கும் தன்மையில் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. டாக்சிகள் மற்றும் தனியார் கார்கள் உட்பட பல வாகனங்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சாங்க்லா டாப்பில் பனிப்பொழிவு காரணமாக சிக்கியது. 


”மோசமான வானிலை மற்றும் இடைவிடாத பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட அவசரநிலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, காரு மற்றும் டாங்ஸ்டே காவல் நிலையங்களில் இருந்து போலீஸ் குழு விரைவாக சாங்க்லா டாப்பிற்கு விரைந்தது. மேலும், சிக்கித்தவித்த வாகனங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன" என போலீசார் தெரிவித்தனர்.


மேலும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும், இந்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள், வானிலை முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிடுமாறும் லடாக் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.