இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையத்தின் படி, இன்று காலை ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் அருகே 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சில வினாடிகள் நீடித்த இந்த நடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சண்டிகர் உட்பட பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து 79 கிமீ தென்கிழக்கே (SE) இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 11:19 மணிக்கு மேற்பரப்பில் இருந்து 220 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், பிரான்சின் பிரதேசத்தில் உள்ள லாயல்ட் தீவுகளுக்கு தென்கிழக்கே 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் தென்மேற்கு பிஜி, நியூசிலாந்தின் வடக்கு திசையிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இது கடலில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் இப்பகுதியில்தான் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்:
கடந்த 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. அப்போது, டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக, 2011ம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.