Kuwait Fire Accident: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடலை, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குவைத் தீ விபத்து:
மத்திய கிழக்கு நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் மற்றும் 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ., பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கொண்டுவரப்பட்ட உடல்கள்:
முன்னதாக விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்காக, வெளியுறவு அமைச்சர் கே.வி. சிங் குவைத் விரைந்து இருந்தார். இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல்களும் ஏற்றப்பட்ட விமானப்படையின் C-130J போக்குவரத்து விமானம் குவைத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டது. தொடர்ந்து, காலை 8.30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சினில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை அந்த விமனாம் வந்தடைந்தது. அங்கு உடல்களை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பெற்றுகொண்டனர்.
ஏற்பாடுகள் தீவிரம்:
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் விமானம் நேரடியாக கொச்சின் வந்தடைந்தது. அங்கிருந்து, அந்த விமானம் வடமாநில தொழிலாளர்களின் உடலுடன் டெல்லி சென்றடைய உள்ளது. இதனிடையே, விமான நிலையம் வந்தடைந்த தொழிலாளர்களின் உடலை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஆம்புலன் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் 7 பேரின் உடல்களும் கொச்சினிலேயே இறக்கப்பட உள்ளன. அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு விரைந்துள்ளார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம், இறந்தவர்களின் உடலை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் விவரம்:
தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 45 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, உயிரிழந்தவர்கள் கேரளா (23), தமிழ்நாடு (7), ஆந்திரப் பிரதேசம் (3), உத்தரபிரதேசம் (3), ஒடிசா (2), பீகார், பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா (தலா 1) என என இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த டென்னி பேபி கேரளாவைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரது இறுதிச்சடங்கு மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.