PM Modi  Italy: ஜி7 உச்சி மாநாட்டை தொடர்ந்து, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.


இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடி:


ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பங்கேற்பதற்காகவும், உலகத் தலைவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, தெற்கு இத்தாலியில் உள்ள அபுலியாவை சென்றடைந்தார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் இத்தாலியில் உள்ள பிரிண்டிசி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அவருக்கு முழுமையான நாள். உலகத் தலைவர்களுடன் நாங்கள் பல இருதரப்பு சந்திப்புகளை திட்டமிட்டுள்ளோம். ஜி7 உச்சிமாநாட்டின் அவுட்ரீச் அமர்விலும் அவர் உரையாற்றுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.






மோடிக்கு உற்சாக வரவேற்பு: 


விமான நிலையத்த வந்தடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டிற்கான இந்திய தூதர் வரவேற்றார். அப்போது இத்தாலிய ராணுவத்தினரும் இசை வாத்தியங்கள் முழங்க, மோடியை வரவேற்றனர். தொடர்ந்து, இன்று அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி, மோடிக்கு வரவேற்பு அளிக்க உள்ளார். இத்தாலி பயணம் தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் தரையிறங்கியுள்ளார். உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒன்றிணைந்து, உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு, ஒளிமயமான எதிர்காலத்திற்காக சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். 






பயணத்தின் முக்கிய நோக்கம்:


ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக கலந்து கொள்ள இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா-மத்திய தரைக்கடல் என்ற தலைப்பில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் போப் பிரான்சிஸ் அவர்களால் நடத்தப்படும் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். போர்கோ எக்னாசியாவின் ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெறும் உச்சிமாநாட்டை தொடர்ந்து,  உலகத் தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மோடியுடன்,  போப் பிரான்சிசும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பங்கேற்கும் முக்கிய தலைவர்கள்:


இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில்,   அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.