திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செப்டம்பர்,17-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 


திருப்பதி


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


நவம்பர் - அர்ஜித சேவையின் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு


வரும் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு அறக்கட்டளை தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்கான முன்பதிவு நடைபெறும். மேலும், அன்று மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்களுக்கான முன்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்க உள்ளது. https://online.tirupatibalaji.ap.gov.in/home/dashboard - என்ற இணைய தளத்தில் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு பேருந்துகள் 


இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்த வருடம் திருப்பதி திருமலையில் இரண்டு முறை பிரம்மோத்சவம் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக வரும் 17-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in , டி.என்.எஸ்.டி.சி. செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


சிறுத்தை நடமாட்டம் - கட்டுப்பாடுகள் 


திருப்பதி கோயில் தரிசனத்திற்கு சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். குழுக்களாக வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடியபடியும், ‘கோவிந்தா... கோவிந்தா....’ என கோஷமிட்டபடியும் நடைபாதையில் வரவேண்டும். இதனால் வன விலங்குகள் நடைபாதையில் வருவதை தடுக்க முடியும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அலிபிரி மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நடைபாதையில் வனவிலங்குகள் வருவதை தடுப்பது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு வனத்துறையினருடன் இணைந்து கம்பி வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.