தமிழக முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் நாளை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை துவங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நாளை வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. 

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ( Kalaignar Urimai Thogai Scheme )

 

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 15ம்தேதி  காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

  பிரத்தேக ஏடிஎம் கார்டு

 

மகளிர் உரிமை திட்டத்தில் ஒரு கோடியே 6,50,000 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற போகிறார்கள். மொத்தம் ஒரு கோடி 63 லட்சம் விண்ணப்பம் வந்திருந்த நிலையில் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு என பிரத்தேக ஏடிஎம் கார்டு வழங்கப்படும்  என தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் நாளை ஏடிஎம் கார்டுகளை வழங்கி இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நாளை வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் ரூபாய் வர வைக்கப்படுகிறது.

 

 ஏற்பாடுகள் தீவிரம்

 

தொடக்க விழாவில் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொண்டு அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தலும், விழா மேடையும் அமைக்கும் பணிகள் பொதுப்பணி துறையின் மூலம் முழு வீச்சில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர், விழா ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விழா பிரம்மாண்டமான வகையில் நடைபெறுவதற்கு  ஆலோசனைகளை வழங்கினார்கள்.  ஆய்வின் போது  காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சிவிஎம்பி எழிலரசன், கருணாநிதி காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மற்றும் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.