எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் திரும்பப்பெறக் கூடாது என்றும்  அந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை காலத்தில் எந்த வகையிலும் பணியிடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.






வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா என்பவர் கொண்டுவந்த விரைவு விசாரணை மனுவின் கீழ் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இவ்வாறு கூறியுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அரசு தலைமை வழக்கறிஞர் வழியாக மத்திய் அரசுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் மத்திய அரசு தரப்பு மத்திய அமலாக்க நிறுவனங்களுக்கு எவ்வித அறிக்கையும் அது தொடர்பாக அனுப்பவில்லை என்றும் சிறப்பு விசாரணைக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சில மாநிலங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் அமர்வு இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாக இருப்பதாகவும் உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் அல்லது உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பின்வாங்குவது அல்லாமல்  சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட மாட்டாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 


முன்னதாக, 'நாட்டில் குண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் குற்றவியல் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் நீதிபதிகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர். சிபிஐ அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. சிபிஐ அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இது,மிகவும் வருந்தத்தக்க நிலை’  என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், "நாட்டில் புதிய போக்கு இன்று காணப்படுகிறது. மனு தாரருக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டால் நீதிபதி அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார். காவல்துறை (அல்லது) புலனாய்வு அமைப்பிடம் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அவை முறையாக விசாரிக்கப்படுவதில்லை" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். 


"இளம் வயது நீதிபதி உத்தம்-ஆனந்த் மரணத்தைப் பாருங்கள். இது முழு முழுக்க அரசுகளின் தோல்வி. நீதிபதிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டாமா" என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.