திருமணம் என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். அதுவும் வடக்கே நடக்கும் திருமணங்கள் நிச்சயமாக ஒரு திருவிழாவைப் போலத் தான் இருக்கின்றன. இங்குபோல் மணப்பெண் தலைகுணிந்தே இருக்கத் தேவையில்லை. மேடையிலேயே மணமகனுடன் ஆடலாம், பாடலாம். மணமகன் மணமகளை தூக்கலாம், சீண்டலாம். திருமணத்துக்கான அத்தனை கூத்துகளும் பஞ்சமில்லாமல் நடைபெறும். அப்படி ஒரு குட்டி கலாட்டா, பஞ்சாபில் நடந்த திருமண வைபவத்தில் அரங்கேறியுள்ளது. அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாக புதுமணத் தம்பதி பிரபலமானதோடு அவர்களுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
வீடியோவில் இருந்தது என்ன?
சிவப்பு நிற அலங்கார உடை, நகைகள், மலர் செண்டு என ஒய்யாரமாக நடந்து வருகிறார் மணப்பெண். அருகிலேயே சிவப்பு நிற டர்பன், வெள்ளை நிற உடை, கையில் வீர வாள் என ராஜா போல் கம்பீரமாக வருகிறார் மணமகன். இருவர் முகத்தில் அத்தனை சிரிப்பு. சுற்றியிருந்த சொந்த பந்தங்களும் நட்புகளும் வாழ்த்துகளையு, கிண்டல், கேலிக்களையும் அள்ளித்தூவ அத்தனையும் ரசித்துக் கொண்டே அந்த தம்பதியினர் நடந்து வருகின்றனர். அப்போது திடீரென மணப்பெண்ணின் கண்கள் அகலமாக விரிகிறது. ஐய்யோ என்று எதையோ பார்த்து பரிதாபப்பட்டு வாய் பிளக்கிறார். அவருடன் வந்த மணமகனும் திகைத்துப்போய் என்னவாயிற்றோ என்ற பதற்றத்தில் பார்க்கிறார். அப்படியே கேமராவை டர்ன் செய்தால் சில அடி தொலைவில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து தொப்பலாக நனைந்து கேமராவுடன் எழுந்து வருகிறார் ஃபோட்டோகிராஃபர். அடக் கொடுமையே என்று ஒட்டுமொத்த கல்யாணக் கூட்டமும் உச்சு கொட்டிக் கொள்கிறது. அழகான மணமக்களை படம்பிடிக்கும் ஆர்வத்தில் (தம்பி... தம்பி..) அப்டியே தொப்பென ஸ்விம்மிங் பூலில் விழுந்துள்ளார். மணமகள், மணமகனுக்கு ஃபோட்டோகிராஃபர் சேதாரம் இல்லாமல் திரும்பிவந்ததில் மகிழ்ச்சி. இருவரும் நிம்மதிப் பெருமூச்சுடன் சிரிப்பையும் உதிர்க்க அது அலை போல் அரங்கை நிரப்புகிறது. இந்தக் காட்சி இணையத்தில் வெளியானது. 'Wishnwed' என்று திருமண புகைப்பட நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட லேட்டஸ்ட் வைரல் வீடியோவாக இது உலா வருகிறது.
வெட்டிங் ஃபோட்டோகிராஃபி அட்ராசிட்டீஸ்..
திருமண வைபவங்களில் புகைப்படம் எடுப்பது, அப்புறம் வீடியோ எடுப்பது என்பது தான் 10 ஆண்டுகாலம் முன் நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் இந்தியத் திருமணச் செலவில் வெட்டிங் ஃபோட்டோகிராஃபி ஒரு பெரிய தொகையை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. ஒருபுறம் இதையே தொழிலாக எடுத்து பலரும் வாழ்க்கையை வளமாக்குகின்றனர் என்றாலும், வசதியில்லாதவர்களும் கூட இதனை செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவது வேதனைக்குரிய விஷயம் தான். ப்ரீ வெட்டிங் ஷூட், வெட்டிங் ஃபோட்டோகிராஃபி, போஸ்ட் வெட்டிங் ஷூட், ஹனிமூன் கேப்சர் என ஃபோட்டோ ஷூட் தனது எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டே செல்கிறது. இதனால், வெட்டிங் ஃபோட்டோகிராஃபி அட்ராசிட்டீஸ் என்ற அடைமொழியும் வந்துவிட்டது. நம் வாழ்வில் மிக இனிமையான தருணத்தை நாம் காட்சிப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கும்போது அதை செய்வது நிச்சயமாக வரவேற்கத்தக்கதே ஆனால் எதில் எவ்வளவு செய்யலாம் என்பதை நம் இந்தியச் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவே இல்லை. நகை, பணம், வாகனம் தாண்டி மணமகன் வீட்டிலிருந்து வரவேற்கப்படும் இன்னொரு வரதட்சணையாக வெட்டிங் ஃபோட்டோகிராஃபி அகிவிடக் கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அக்கறைக் குரலாக இருக்கிறது.