TN Railaway Stations Upgrade: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.
ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்:
நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்தும், “அம்ருத் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதுமுள்ள போக்குவரத்து நிறைந்த, ஆயிரத்து 318 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட தேர்ந்தெடுக்கப்பட்டன. முதற்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை மற்றும் லிஃப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 554 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். வரும் 26ம் தேதி காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் 34 ரயில் நிலையங்கள்:
“அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து மொத்தமாக 34 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தென்மேற்கு ரயில்வே துறையை சேர்ந்த மூத்த அதிகாரி பேசுகையில், “கர்நாடகாவில் 28 ரயில் நிலையங்களும், ஆந்திராவில் இரண்டு ரயில் நிலையங்களும், தமிழகத்தில் இரண்டு ரயில் நிலையங்களும், மற்றும் கோவாவில் இரண்டு ரயில் நிலையங்களும் ரூ.801.9 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ஹுப்பள்ளி கோட்டத்தின் ஏழு நிலையங்கள்- அல்மட்டி, பாதாமி, பாகல்கோட், விஜயபுரா, முனிராபாத், சன்வெர்டாம், வாஸ்கோடகாமா; பெங்களூரு கோட்டத்தின் 15 நிலையங்கள்- துமகுரு, ஒயிட்ஃபீல்டு, பங்காரப்பேட்டை, சன்னப்பட்டணா, தருமபுரி, ஓசூர், தொட்டபள்ளாப்பூர், இந்துப்பூர், கெங்கேரி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், மல்லேஸ்வரம், மாலூர், மண்டியா, ராமநகரம்; மற்றும் மைசூர் கோட்டத்தின் 12 நிலையங்கள்- சாகர் ஜம்பகுரு, சக்லேஷ்பூர், ஷிவமொக்கா டவுன், சுப்ரமணிய சாலை, தல்குப்பா, திப்தூர், பந்தவாலா, சாமராஜநகர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, ஹாசன் மற்றும் ராணிபெண்ணூர் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்படும் ரயில் நிலையங்கள் பிரமிக்க வைக்கும் வகையில், அதிநவீன வசதிகள் கொண்டதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் “அம்ருத் பாரத் நிலையம்”:
“அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் முதற்கட்டத்தில் தெற்கு ரயில்வே துறையின் கீழ், திருத்தணி, சூளூர்பேட்டா, செயிண்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூர் - சென்னை கடற்கரை ரயில் நிலையம் இடையேயான பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வில்லிவாக்கம், எலிபேண்ட் கேட் பிரிட்ஜ், பேசின் பிரிட்ஜ் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையங்களிலும், மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.