நகரங்களில் 3 நாட்களிலும், கிராமங்களில் 15 நாட்களில் இனிமேல் புதிய மின் இணைப்பு கிடைக்கும் என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
புதிய மின் இணைப்புக்காலம்:
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய மின் இணைப்பு கிடைக்கும் வகையில் தற்போது அனைத்து விதிகளையும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அதன்படி காத்திருக்கும் காலமானது பெரிய நகரங்களில் 7 நாட்களுக்கு பதிலாக 3 நாட்களிலும், கிராமங்களில் புதிய மின் இணைப்புகளுக்கு 30 நாட்களில் இருந்து 15 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் புதிய இணைப்புகள் பெறவும், மேற்கூரை சோலார் யூனிட்களை நிறுவவும் விதிகளை அரசு தளர்த்தியுள்ளது.
இதுதொடர்பான மின்சாரம் (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020-ல் திருத்தம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மெட்ரோ நகரங்களில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான நேரம் 7 நாட்களில் இருந்து 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு பதிலாக 7 நாட்களிலும் புதிய மின் இணைப்பு கிடைக்கும். அதேசமயம், கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில், புதிய இணைப்புகளை எடுக்க அல்லது ஏற்கனவே உள்ள இணைப்புகளை மாற்றுவதற்கான கால அளவு 30 நாட்களுக்கு முன்பு போலவே இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.
புதிய மீட்டர் பொருத்தப்படும்
தொடர்ந்து பேசிய ஆர்.கே.சிங், “உண்மையான மின் பயன்பாட்டுக்கு ஏற்ப மீட்டர் ரீடிங் இல்லை என புகார் எழுந்தால், புகார் பெறப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் விநியோக உரிமதாரர் கூடுதல் மீட்டரை பொருத்த வேண்டும். இந்த கூடுதல் மீட்டர் அளவீடுகளைச் சரிபார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும். புதிய விதிகளில், நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வரும் பட்சத்தில், மின் நுகர்வு சரிபார்ப்பதற்காக, நிறுவனங்கள் நிறுவியுள்ள மீட்டர்களை சரிபார்க்கும் விதிமுறையும் உள்ளது. நுகர்வோர் நலனே அரசுக்கு முக்கியம் என்பதால் இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
EV வாகனத்தை சார்ஜ் செய்ய புதிய இணைப்பு
புதிய விதிகளின் கீழ், நுகர்வோர் தங்கள் மின்சார வாகனங்களை (EV களை) சார்ஜ் செய்ய தனி மின் இணைப்பைப் பெறலாம். 2070க்குள் கார்பன் உமிழ்வைக் குறைத்து நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை எட்ட வேண்டும் என்ற நாட்டின் இலக்கை நோக்கி நகர்வதற்கு இது வசதியாக இருக்கும். கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், காலனிகள் போன்றவற்றில் வசிப்பவர்கள் இப்போது விநியோக உரிமதாரரிடமிருந்து அனைத்திற்கும் தனிப்பட்ட இணைப்புகளையோ அல்லது மொத்த வளாகத்திற்கும் சேர்த்து ஒற்றை-புள்ளி இணைப்பையோ தேர்வு செய்ய விருப்பம் உள்ளது.
அரசு விதிகளை தளர்த்தியது
மேலும் 10 கிலோவாட் வரையிலான சூரிய மின்சக்தி வசதியை ஏற்படுத்த தொழில்நுட்ப ஆய்வுகள் தேவையில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு சாத்தியக்கூறு ஆய்வுக்கான காலக்கெடு 20 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு முடிக்கப்படாவிட்டால், அது அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படாது” எனவும் மத்திய எரிசக்திதுறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.