தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஒரு முக்கியமான சந்தையில் ஹாலோவீனுக்காக மக்கள் திரண்டிருந்தபோது நெரிசல் ஏற்பட்டது. அப்போது, குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஹாலோவீனைக் கொண்டாட கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர், பெரும்பாலும் டீன் ஏஜ் மற்றும் 20 வயதிற்குட்பட்டவர்கள் மத்திய சியோலுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியதால் அந்த பகுதியின் குறுகிய சந்துகள் மற்றும் வளைந்த தெருக்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவு மற்றும் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கான செலவை அரசே ஏற்கும் என்றும் கூறினார்.
இதுகுறித்து விரிவாக பேசிய யூன் சுக்-யோல், "இந்த சம்பவத்திற்கான காரணத்தை அரசு முழுமையாக ஆராய்ந்து, எதிர்காலத்தில் அதே விபத்து மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய அடிப்படை தேவைகளை செய்யும்" என்றார்.
தென் கொரியாவின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான நெரிசல் இதுவாகும். ஒரு குறுகிய சந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை விவரித்த நேரில் கண்ட சாட்சி, "மக்கள், சீட்டு கட்டு போல விழுந்தனர்" என்றார்.
ஹாலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 19 வெளிநாட்டவர்கள் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் 97 பேர் பெண்கள், 54 பேர் ஆண்கள். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மாரடைப்புக்கு ஆளான மக்களை மீட்க காவல்துறையும் தீயணைப்பு வீரர்களும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் கூறுகையில், "மக்கள் ஒரு கல்லறை போல மற்றவர்களின் மேல் அடுக்கி வைக்கப்பட்டனர். சிலர் படிப்படியாக சுயநினைவை இழந்து கொண்டிருந்தனர். சிலர் அந்த நேரத்தில் இறந்துவிட்டார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து முதல்முறையாக ஹாலோவீன் நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "இளம் உயிர்களின் இழப்பால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறினார்.