இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் மரணம் பொதுவானதுதான் என்றாலும், அது எந்த வகையில் நிகழ்கிறது என்பதைப் பொறுத்து அதன் முக்கியத்துவம், பேசுபொருள் மாறுபடுகிறது. 


அந்த வகையில் இந்திய நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், தனது மனைவி உள்ளிட்ட 12 பேருடன் குன்னூரில் நடைபெற்ற கோர ஹெலிகாப்டர் விபத்தில் இன்று (டிச.8) உயிரிழந்தார். அசாத்தியப் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த எம்ஐ17வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி, ராணுவத்திலேயே உச்ச அந்தஸ்தில் உள்ள அதிகாரி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




அந்த வகையில், எதிர்பாராத விமான விபத்தால் நடுவானில் திடீரென உயிரிழந்த பிரபலங்களின் பட்டியல் இதோ:


இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி


காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி. மூத்த மகன் ராஜீவ் காந்திக்கு அரசியலில் ஆர்வம் இல்லாத நிலையில், காங்கிரஸின் வருங்காலத் தலைவராக சஞ்சய் காந்தி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டார். இந்திரா காந்தியும் அதையே விரும்பினார். 



அடிப்படையில் விமானியான சஞ்சய் காந்திக்கு விமானங்கள் ஓட்டுவதில் அலாதியான ஆர்வமுண்டு. விமானத்தில் சாகசங்கள் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். 1980-ம் ஆண்டு ஜூன் 23 அன்றும் டெல்லியில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய விமானத்தை ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்கு உள்ளானது. இதில் சஞ்சய் காந்தியோடு, உடன் பயணித்த விமானியும் உயிர் இழந்தார். விபத்தில் சஞ்சய் உடல் மோசமாக சேதமடைந்தது. 8 மருத்துவர்கள் இணைந்து, 4 மணிநேரம் செலவிட்டு இறுதி ஊர்வலத்துக்காக அவரின் உடலைச் சீரமைக்க வேண்டி இருந்தது. 


முன்னால் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா


குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த மாதவராவ் சிந்தியா, காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தவர். இவரின் தந்தை குவாலியரை ஆண்ட கடைசி அரசர். அரசியலில் நுழைந்த மாதவராவ் சிந்தியா, தன்னுடைய 26 வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் தனித்து நின்று வெற்றிபெற்ற சிந்தியா, 1980-ல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 




வருங்காலப் பிரதமர் வேட்பாளர் என்று அப்போது பேசப்பட்ட  மாதவராவ் சிந்தியா பயணம் செய்த விமானம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மெயின்புரி மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி அவர் உயிரிழந்தார். 9 முறை மக்களவை எம்.பி.யாக இருந்த மாதவராவ் சிந்தியா, இறப்பு தன்னைச் சந்திக்கும்வரை அரசியலில் தோல்வியைச் சந்திக்கவே இல்லை. 


ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ரெட்டி


ஒய்எஸ்ஆர்  என்று ஆந்திர மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் மருத்துவப் படிப்பை முடித்து, மக்களுக்கு சேவையாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். பின்னர் 1978 வாக்கில் காங்கிரஸில் இணைந்து, அரசியலில் நுழைந்த ஒய்எஸ்ஆர் , அமைச்சர், எம்.பி., காங்கிரஸ் மாநிலத் தலைவர், முதல்வர் எனப் படிப்படியாக உயர்ந்தார். 




முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை அறிவித்தார். முதல்முறை முதல்வர் பதவியை முழுமையாக நிறைவு செய்த ஒய்எஸ்ஆர், இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். 2009 செப்டம்பர் 2-ம் தேதி அவர் பயணித்த பெல் 430 ரக ஹெலிகாப்டர், ராயலசீமா பகுதியில் உள்ள நல்லமலா அடர் காட்டுப் பகுதியில்  திடீரென மாயமானது. நக்சல்கள் ஒய்எஸ்ஆரைக் கடத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டது. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு 3-ம் தேதி பிரதமர் அலுவலகம், விமானம் விபத்துக்கு உள்ளானதாக அறிவித்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்திருந்தன. 


நடிகை செளந்தர்யா


திரையில் செளந்தர்யா என்று அழைக்கப்பட்ட செளம்யா, தேசிய விருது பெற்ற பிரபல நடிகை. 90களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துப் புகழ்பெற்றவராக விளங்கினார். முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜூனா, ரஜினி, கமல் எனத் தொடங்கி, பெரும்பாலான நடிகர்களுடன் நடித்தார். 




2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், கட்சியின் பரப்புரைக்காக பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவரின் சகோதரரும் உடன் சென்றார். விமானம் கிளம்பிய 100 அடி தூரத்திலேயே திடீரென விபத்து ஏற்பட்டது. தள்ளாடிய விமானம் அப்படியே வெடித்துச் சிதறியது. விபத்தின்போது செளந்தர்யா கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.


நாடாளுமன்ற முன்னாள் அவைத்தலைவர் ஜிஎம்சி பாலயோகி


காக்கிநாடாவைச் சேர்ந்த காந்தி மோகன சந்திர பாலயோகி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். மாஜிஸ்திரேட்டாகவும் இருந்துள்ளார். அரசியலில் நுழைந்த அவர், நாடாளுமன்றத்தின் 12-வது அவைத்தலைவராகி நாட்டின் முதல் தலித் சபாநாயகர் என்ற சாதனையைப் படைத்தார். 2002-ம் ஆண்டு, ஆந்திராவில் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். 




பிற முக்கிய விபத்துகள்


அதேபோலக் கடந்த 2005-ல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், ஹரியானா மாநிலத்தின் அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் சுரேந்திர சிங் மற்றும் பிரபலத் தொழிலதிபரும் மின்சாரத் துறை அமைச்சருமான ஓ.பி.ஜிண்டால், முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.


மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம், அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜீ காண்டு, மேகாலயா அமைச்சர் சி.சங்மா, பிரபல விஞ்ஞானி ஹோமி பாபா, தொழிலதிபர் அசோக் பிர்லா ஆகியோரும் தனித்தனி விமான விபத்துகளில் உயிரிழந்தனர். 


விமான விபத்தில் உயிர் தப்பியவர்கள் தெரியுமா?


விமான விபத்துகளில் பெரும்பாலும் அரிதிலும் அரிதாகவே அதில் பயணிப்போர் தப்பிப் பிழைத்துள்ளனர். அதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், காங்கிரஸ் தலைவர் அகமது படேல், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் படா உள்ளிட்டோர் அடக்கம்.


க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com