இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற Mi17 V5 ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அவரது உயிரிழப்பு நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத் மரணத்துக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அகால மரணம் அறிந்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நான்கு தசாப்த கால தன்னலமற்ற சேவை வீரத்தால் குறிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி.
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உள்பட நமது ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் ஜெனரல் ராவத் பணியாற்றினார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை தன்னுடன் கொண்டு வந்தார். அவரது சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது” என பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெனரல் பிபின் ராவத் இறந்திருப்பது தேசத்திற்கு மிகவும் சோகமான நாள். தாய்நாட்டிற்கு மிகுந்த பக்தியுடன் சேவையாற்றிய துணிச்சலான வீரர்களில் இவரும் ஒருவர். அவரது முன்மாதிரியான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெனரல் ராவத் நாட்டிற்காக தைரியத்துடனும் விடாமுயற்சியுடனும் சேவையாற்றினார். பாதுகாப்புப் படை தலைமை தளபதியாக அவர் திட்டங்களைத் தயாரித்திருந்தார்.
தமிழ்நாட்டில்இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளோம். இது நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு” என பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்துடன் உள்ளன.மேலும் உயிரிழந்த மற்ற அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள். இந்த துயரத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது” என பதிவிட்டுள்ளார்.